வியாழன், மார்ச் 24

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ராஜ்ஜியத்திற்கு முற்றுப்புள்ளி


ஆஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கு இடையில் இன்று அஹ்மதபாத் மைதானத்தில் இடம்பெற்றஇரண்டாவது உலக கோப்பை காலிறுதி போட்டியில், யுவராஜ் சிங், சுரேஷ் ரைனாவின் இறுதி நேர அதிரடியால் இந்தியா 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பாகிஸ்த்தானுடன் அரையிறுதியில் மோதவிருக்கிறது இந்தியா!

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கள் இழப்புகு 260 ரன்களை எடுத்தது. ஒரு கட்டத்தில், 41 ஓவர்கள் முடிவில் 190 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து அவ் அணி தடுமாறிய போதும், ஹஸி, பாண்டிங் ஆகியோரின் அதிரடியால் ஒரு வழியாக 260 ஓட்டங்களை இறுதியில் எடுத்துக்கொண்டது.

தொடர்ந்து பல போட்டிகளில் சோபிக்க தவறியிருந்த ரிக்கி பாண்டிங், இன்றைய போட்டியில் அதிரடியாக 104 ரன்களை எடுத்திருந்தார்.

பந்துவீச்சில் யுவராஜ் சிங், சஹ்கீர் கான், அஷ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாட தொடங்கிய இந்திய அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷேவாக் 15 ரன்கள் எடுத்திருந்த போதும், ஹஸியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

டெண்டுல்கர் (53), கம்பீர் (50) ஜோடி சிறப்பான இணைப்பாட்டத்தை வழங்கினர். கம்பீர் ரன் அவுட்டில் ஆட்டமிழக்க நேர்ந்தது. அடுத்து களமிறங்கிய விராட் கோலி 24 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். இந்திய அணி வீழ்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருந்த போது, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனியும் 7 ரன்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

ஒரு கட்டத்தில் 37.3 பந்துகளில் 187 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தவித்தது இந்தியா. எனினும் யுவராஜ் , ரெய்னா இணைந்து இரு ஓவர்களில் அதிக ரன்களை எடுத்து அணியை நிலைநிறுத்தினர். யுவராஜ் சிங் ஆட்டமிழக்காமல் 57 ரன்களையும் அவருடன் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரைனா 28 பந்துகளில் 34 ரன்களையும் , எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தனர்.

தொடர்ந்து மூன்று முறை உலக கிண்ணத்தை சுவீகரித்த ஆஸி. அணியின் உலக கோப்பை கனவு இன்று இந்தியாவின் வெறித்தனமான ஆட்டம் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

1999 ம் ஆண்டு பாகிஸ்த்தானை இறுதிப்போட்டியில் வீழ்த்திருந்த ஆஸி அணி, 2003 இல் இந்தியாவையும் 2007 இல் சிறிலங்காவையும் வீழ்த்தி கோப்பையை தனதாக்கி கொண்டது.

2003ம் ஆண்டு இந்தியாவுடனான இறுதி போட்டியில் ஆஸி அணி 125 ரன்களால் வெற்றி பெற்றிருந்தது. இன்றுடன் ஆஸி அணி உலக கோப்பை போட்டிகளிலிருந்து வெளியேறுவதால், அரையிறுதி, இறுதி போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்றைய போட்டியில் யுவராஜ் சிங் மீண்டும் ஆட்டநாயகனாக தெரிவானார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக