புதன், மார்ச் 23

காலிறுதியின் முதலாவது போட்டி


உலகக் கோப்பையின் முதல் காலிறுதி ஆட்டம் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் புதன்கிழமை நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான்-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன. இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இவ்விரு அணிகளுமே கணிக்க முடியாத அணிகளாகவே கருதப்படுகின்றன.
பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் நடப்புச் சாம்பியன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியதோடு, 10 புள்ளிகளுடன் "பி' பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சூதாட்டம், அணித் தேர்வில் குளறுபடி என பல்வேறு சர்சைகளுக்குப் பின் விளையாட வந்தாலும் இதுவரை நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் நீங்கலாக மற்ற அனைத்திலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.
நடப்புச் சாம்பியனை வீழ்த்திய உற்சாகத்திலும், மிகுந்த நம்பிக்கையுடனும் களமிறங்குகிறது பாகிஸ்தான். பேட்டிங்கைப் பொறுத்தவரையில் பாகிஸ்தானுக்கு இன்னும் சிறப்பான தொடக்கம் அமையவில்லை என்பது மிகப்பெரிய குறையாக உள்ளது. முகமது ஹபீஸ், அகமது ஷாஸத் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பதால், பாகிஸ்தான் ஆரம்ப ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து விடுகிறது.
கடந்த ஆட்டத்தில் கம்ரான் அக்மலை தொடக்க வீரராக களமிறக்கியும் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. அதேசயம் மிடில் ஆர்டரில் மூத்த வீரர்கள் சிறப்பாக ஆடி வந்தாலும், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. ஆனாலும் யாராவது ஒருவர் நிலைத்து நின்று அணியை தூக்கி நிறுத்தி விடுகின்றனர். யூனிஸ்கான், மிஸ்பா உல் ஹக், உமர் அக்மல் ஆகியோர் மிடில் ஆர்டரில் வலுசேர்க்கிறார்கள்.
ஆஷாத் ஷபிக் கடந்த இரண்டு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்துள்ளார். அவர் இந்த ஆட்டத்திலும் நன்றாக விளையாடி பாகிஸ்தானுக்கு வலுசேர்க்கக்கூடும்.
கேப்டன் சயிட் அப்ரிடி எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. வேகமாக ஆட முற்பட்டு விரைவாக ஆட்டமிழந்து விடுகிறார்.
அப்துல் ரசாக் மீண்டும் பார்முக்கு திரும்பியதன் மூலம் பாகிஸ்தானின் பின்வரிசை பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார். இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியில் எந்த வீரரும் சதம் அடிக்கவில்லை.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷோயிப் அக்தர் ஜொலிக்கவில்லை. உமர் குல், நல்ல பார்மில் உள்ளார். ரசாக், அப்ரிதி, ஹபீஸ் ஆகியோரும் பந்துவீச்சில் வலுசேர்க்கின்றனர். இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 17 விக்கெட்டுகளுடன் அப்ரிடி முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்தவரையில் பேட்டிங், பந்துவீச்சு, களத்தடுப்பு என அனைத்திலுமே சமபலம் வாய்ந்த அணியாகவே உள்ளது. என்றாலும், பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் சற்று பலம் குறைந்த அணியாகவே உள்ளது.
பேட்டிங்கில் கிறிஸ் கெயில், டேவன் ஸ்மித், கைரான் பொல்லார்டு, கேப்டன் டேரன் சமி ஆகியோர் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்றாலும், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகின்றனர். பந்துவீச்சில் கெமர் ரோச், சுலைமான் பென், பிஷு, ரவி ராம்பால், ரஸ்ஸல் ஆகியோர் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிக்கக்கூடும்.
வயிற்று வலி காரணமாக கிறிஸ் கெயில், கெமர் ரோச் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விளையாடவில்லை. இவர்கள் தற்போது குணமாகிவிட்டதால் பாகிஸ்தானுக்கு எதிராக களம் காண்கிறார்கள். இந்த ஆட்டத்தில் வென்றால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக