வியாழன், மே 5

வெளிவராத புதுத் தகவல்


எந்த ஒரு படத்திற்கும் இல்லாத அளவுக்கு துவங்குவதற்கு முன்பே பேசப்படுகிற படங்கள் ஒரு சிலருடையதாகதான் இருக்கும். ரஜினி, கமல், அந்த வரிசையில் மணிரத்னம் படங்களை உதாரணமாக சொல்லலாம். அமரர் கல்கி எழுதிய கதையை புரட்சித் தலைவர் எம்ஜிஆரே உருவாக்க துணிந்து முடியாமல் போனது. அப்புறம் கமல் முயன்றார். அதுவும் சப்பென்றானது. 

கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் கதை திரைப்படமாக உருவாகிறது என்ற செய்தி பல சரித்திரக்கதை விரும்பிகளுக்கு சர்க்கரை பொங்கலாக இனித்திருக்கும். 

அதற்கேற்றார் போல விஜய், மகேஷ்பாபு, அனுஷ்கா, விஷால், போன்ற முன்னணி ஹீரோ ஹீரோயின்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி முடித்தார் மணிரத்னம். சத்யராஜ், ராஜ்கிரண் போன்ற நடிகர்களுக்கும் முக்கியமான ரோல் இருந்தது. இதில் பெரிய பழுவேட்டரையராக நடிக்கிறேன் என்று சந்தோஷமாக கூறிவந்த சத்யராஜ், சமீபகாலமாக இந்த படம் பற்றி கேட்டாலே உம் என்றாகிறார். காரணம், படமே கைவிடப்பட்டதுதான். 

கோடம்பாக்கத்தை திடுக்கிட வைத்திருக்கும் இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை? அறிந்து கொள்வதற்காக பலரையும் சந்தித்தோம். அவர்கள் கூறிய தகவல்கள் இதை உறுதி செய்தது. அத்துடன், சுவாரஸ்யமான பல பின்னணி தகவல்களும் கிடைத்தது நமக்கு. 

இந்த படம் நிறுத்தப்பட்டதற்கு காரணமே இசையமைப்பாளர் ஏ.ரஹ்மான்தானாம். மணிரத்னத்தை நேரடியாக சந்தித்தவர், அவரிடம் இந்த படம் குறித்து ஏராளமாக விவாதித்தாராம். அப்போது சரித்திரப்படங்களின் எழுச்சி தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவை சுற்றி சுற்றி அடிக்கிறது. அவ்வளவு ஏன்? இந்தியிலும் ஜோதா அக்பர் என்ற சரித்திரப்படம் வந்திருக்கிறது. 

தமிழில் சமீபத்தில் வெளிவந்த பொன்னர் சங்கர், வசந்தபாலன் இயக்கும் அரவான், ஏழாம் அறிவு படத்தில் ஒரு எபிசோட் சரித்திரக் கதைதான். இந்த நேரத்தில் தெலுங்கில் வெளிவந்த மாவீரன் படத்தையும் தமிழில் வெளியிடுகிறார்கள். மலையாளத்தில் கூட பழசிராஜா வந்துவிட்டது. எல்லாமே சரித்திரக்கதை என்பதால், இது போன்ற கதைகளின் மீது சட்டென்று ஒரு வெறுப்பு வர வாய்ப்புகள் இருக்கிறது. எனவே யோசித்து செய்யுங்கள். இதுதான் ரஹ்மான் மணிரத்னத்திற்கு தந்த அட்வைஸ். 

அத்துடன் தான் புதிதாக போட்ட நான்கு ட்யூன்களை மணிக்கு போட்டுக் காண்பித்தாராம். அலைபாயுதே மாதிரி ஒரு காதல் கதையை எடுங்கள். இந்த பாடல்களை அப்படியே அந்த படத்திற்கு தருகிறேன் என்றும் கூறினாராம். ட்யூன்களை கேட்டுப் பார்த்த மணிரத்னம் அப்படியே கரைந்து போனாராம். ரஹ்மான் சொன்ன எல்லா விஷயங்களையும் மனதில் அசை போட்டவர், பொன்னியின் செல்வனை அப்படியே ஓரம் கட்டிவிட்டு புதிய பட வேலைகளில் இறங்கிவிட்டார். 

இது முழுக்க முழுக்க காதல் கதை. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஆர்யாவும் மகேஷ் பாபுவும் நான்தான் இதில் நடிப்பேன் என்று மல்லு கட்டுகிறார்களாம் மணிரத்னத்திடம். நான் கனவில் மிதந்து கொண்டிருக்கிறேன். என்னை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று ஆந்திராவில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்பியிருக்கிறாராம் மகேஷ்பாபு. 

ஆனால் இவர்கள் இருவருக்குமே தனது வழக்கமான புன் முறுவலை பதிலாக்கிவிட்டு புதுமுகங்களை தேடிக் கொண்டிருக்கிறார் மணிரத்னம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக