சனி, மார்ச் 19

சென்னையில் பலத்த பாதுகாப்பு

சென்னை: இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான முக்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பி பிரிவில் நடைபெறும் இந்தப் போட்டி, இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு கடைசி லீக் போட்டியாகும். இதில் வெற்றி பெற்றால்தான் மேற்கு இந்தியத் தீவுகள் அணி கால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். இந்தியாவுக்கு அப்படி எந்த சிக்கலும் இல்லை. இருப்பினும் சென்னையில் போட்டி நடைபெறவுள்ளதால் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது,
இந்த நிலையில் சென்னை ஸ்டேடியத்திற்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வந்துள்ளதைத் தொடர்ந்து மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதுகுறித்து காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

மிக பலத்த பாதுகாப்புக்கு நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

போட்டி நடைபெறும் சமயத்தில் ஸ்டேடியம் உள்ள வான் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் தயார் நிலையில் வைத்திருக்குமாறு ராணுவத்தைக் கேட்டுக் கொண்டுள்ளோம். 


மேலும் சென்னை கடல் பகுதியில், கடற்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மைதானத்துக்கு உள்ளே புகைப்பிடித்தல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸார் ஈடுபடவுள்ளனர். 180 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

போட்டிக்காக மைதானத்தின் உள்ளே செல்பவர்கள் போட்டி முடியும் வரை வெளியே வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ராஜேந்திரன்.


1 கருத்து: