திங்கள், மார்ச் 28

முதல் அரை இறுதி ஆட்டம் கொழும்பில் நாளை ..

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டம் கொழும்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கடுமையாக போராடும். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணி தனது சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் பலத்துடன் உள்ளது. அந்த அணி “லீக்” ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் மட்டுமே தோற்றது.

நியூசிலாந்து அணியை ஏற்கனவே “லீக்” ஆட்டத்தில் வென்று இருந்தது. இதனால் இலங்கை அணி அதிக நம்பிக்கையுடன் காணப்படுகிறது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என 3 துறைகளிலும் அந்த அணி சமபலம் பெற்று திகழ்கிறது.

பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் தில்சான், தரங்கா, கேப்டன் சங்ககரா, ஜெயவர்த்தனே ஆகியோரும், பந்து வீச்சில் மலிங்கா, முரளீதரன், மெண்டீஸ், மேத்யூஸ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான கால்இறுதியில் அந்த அணி அபாரமாக வென்று இருந்தது. இதனால் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நம்பிக்கையில் இலங்கை உள்ளது.

1996-ம் ஆண்டு சாம்பியனான அந்த அணி கடந்த உலக கோப்பை போட்டியிலும் (2007) இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்று இருந்தது. இலங்கையுடன் ஒப்பிடுகையில் நியூசிலாந்து சற்று பலவீனமான அணிதான். ஆனால் கால் இறுதியில் தென்ஆப்பிரிக்காவை அதிர்ச்சிகரமாக தோற்கடித்து இருந்தது.

இதனால் அந்த அணியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அந்த அணி “லீக்” ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளிடம் தோற்று இருந்தது. ஆனால் பாகிஸ்தானை வென்று இருந்தது. நியூசிலாந்து அணியில் விக்கெட் விழுந்தால் சரிய ஆரம்பித்து விடும்.

இது அந்த அணியின் பலவீனம். தொடக்க ஜோடியின் ஆட்டம் அந்த அணிக்கு மிகவும் முக்கியமாகும். மேக்குல்லம், குப்தில், டெய்லர், ரைடர் ஆகியோர் பேட்டிங்கிலும், சவுத்தி, ஜேக்கப்ஓரம், நாதன் மேக்குல்லம் ஆகியோர் பவுலிங்கிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் நியூசிலாந்து உள்ளது. இதுவரை 5 முறையும் அந்த அணி அரை இறுதியில் தோற்று இருந்தது. பகல்-இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

1 கருத்து: