செவ்வாய், மார்ச் 29

உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவை இதுவரை வெல்லாத பாக்.

உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை இந்தியாவை ஒரு முறை கூட வென்றதில்லை பாகிஸ்தான். இது இந்தியாவுக்கு சாதகமான விஷயமாக இருந்தாலும் இந்த முறை அதை மாற்றி எழுதுவோம் என்று பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிதி சவால் விட்டிருப்பதால் இந்திய அணி சற்றே கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.இந்தியா, பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி என்றாலே அங்கு தீப்பொறி பறக்கும். வீரர்களின் ஆட்டத்தில் மட்டுமல்லாமல், ரசிகர்களின் ரசிப்பிலும் கூட ரகளை தெரிக்கும்.

இந்த இரு அணிகளும் இந்த முறை உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன. இதனால் உலகக் கோப்பைப் போட்டித் தொடரே படு சூடாகி விட்டது. காரணம், இந்த இரு நாடுகளுக்கும் இதுதான் இறுதிப் போட்டி என்பதால்.


இரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் நான்கு முறை மோதியுள்ளன. அதில் நான்கிலுமே இந்தியாதான் வென்றுள்ளது. இதுவரை ஒருமுறை கூட பாகிஸ்தான் வெற்றி பெற்றதில்லை. இது இந்தியாவைப் பொறுத்தவரை சாதகமான அம்சமாக இருந்தாலும் பாகிஸ்தான் இந்த முறை சவாலுடன் மொஹாலியில் வந்திறங்கியுள்ளதால் இந்தியா சற்றும் சகஜமாக இருக்க முடியாத நிலை.


அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெற்றவுடனேயே பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிதி கூறுகையில், இந்தியாவை அரை இறுதியில் சந்திப்பதற்கு நாங்கள் பயப்படவில்லை. இதுவரை நாங்கள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை வெல்லாமல் போயிருக்கலாம். ஆனால் இந்த முறை அது நடக்காது. இம்முறை நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.


அதை விட முக்கியமாக சச்சின் டெண்டுல்கரை பாகிஸ்தான் குறி வைத்துள்ளதாகவும் தெரிகிறது. சச்சின் மட்டுமல்லாமல் யுவராஜ் சிங்கையும் விரைவிலேயே வீழ்த்தவும் பாகிஸ்தான் வியூகம் வகுத்துக் காத்திருக்கிறது.


சச்சின் இன்னும் ஒரே ஒரு சதம் போட்டால், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 100 சதங்களை நிறைவு செய்து புதிய உலக சாதனை படைக்கலாம். ஆனால் அதை மொஹாலியில் நிறைவேற்ற விட மாட்டோம் என்றும் அப்ரிதி கூறியுள்ளார்.


தற்போதைய நிலையில் யுவராஜ் சிங் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பதால் அவரை விரைவிலேயே அவுட் ஆக்கவும், அவரது பந்துகளை சிறப்பாக ஆடவும் தேவையான வியூகங்களை பாகிஸ்தான் வகுத்துள்ளது. 



எனவே இந்த அரை இறுதிப் போட்டி இந்திய அணி மிக மிக கவனமாக இருந்தாக வேண்டிய நிலையில்தான் உள்ளது. சற்றே அசந்தாலும், அடித்து விட்டுப் போய் விடும் பாகிஸ்தான் என்பதால் இந்திய ரசிகர்கள் பதைபதைப்புடன்தான் உள்ளனர்.



இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரை மோதியுள்ள போட்டிகள் குறித்த ஒரு மின்னல் பார்வை...



இரு அணிகளும் ஆடிய டெஸ்ட் போட்டிகள் - 59
இந்தியா வென்றவை - 9
பாகிஸ்தான் வென்றவை - 12
டிரா ஆனவை - 38


இரு அணிகளும் ஆடிய ஒரு நாள் போட்டிகள் - 119
இந்தியா வென்றவை 46
பாகிஸ்தான் வென்றவை - 69
டை அல்லது முடிவில்லாமல் போனவை - 4


இரு அணிகளும் ஆடிய டுவென்டி 20 போட்டிகள் - 2
இந்தியா வென்றது - 1
டை ஆனது - 1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக