ஞாயிறு, பிப்ரவரி 27

களத்தில் இன்று இந்திய இங்கிலாந்து அணிகள் ..

பெங்களூரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் உலகக் கோப்பையின் 11-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தைச் சந்திக்கிறது இந்தியா.
இரு அணிகளுமே தங்களின் முதல் ஆட்டத்தில் வெற்றிபெற்ற உற்சாகத்தில் களமிறங்குகின்றன. இங்கிலாந்துடன் ஒப்பிடும்போது தோனி தலைமையிலான இந்திய அணி சற்று வலுவாகவே உள்ளது.
பெங்களூர் சின்னசாமி மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்த சேவாக், கோலி ஆகியோர் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று தோனி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். ஆனாலும் இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், கம்பீர், யுவராஜ் ஆகியோர் சிறப்பாக ஆடும்பட்சத்தில் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டமுடியும். இந்திய அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங் வரிசையில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது. ஆனால் பந்துவீச்சில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்ரீசாந்த் 5 ஓவர்களை வீசி 53 ரன்களை வாரி வழங்கினார். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் போராடியே வென்றது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அப்படி ஒருநிலை உருவாகிவிடக் கூடாது என்பதில் இங்கிலாந்து வீரர்கள் எச்சரிக்கையோடு செயல்படக்கூடும்.
அந்த அணியின் அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ஸ்டிராஸடன் இணைந்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். எந்த பந்துவீச்சாளர்களையும் துவம்சம் செய்யும் ஆற்றல் படைத்த பீட்டர்சன் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கக்கூடும்.
மிடில் ஆர்டரில் டிராட், இயன் பெல், ரவி போபரா, பால் காலிங்வுட் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அதேசமயம் இங்கிலாந்தின் பந்துவீச்சு குறித்து கேப்டன் ஸ்டிராஸ் கவலையடைந்துள்ளார். கத்துக்குட்டி அணியான நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஆன்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் 20 ஓவர்களில் 137 ரன்களை வாரி வழங்கினர். சுழற்பந்து வீச்சாளர் கிரீம் ஸ்வான் நல்ல பார்மில் உள்ளார்.
இரு அணிகளுமே சிறப்பான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளதால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்திய அணி: 
மகேந்திர சிங் தோனி (கேப்டன்), வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், கெüதம் கம்பீர், விராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முனாப் படேல், ஸ்ரீசாந்த், பியூஷ் சாவ்லா, அஸ்வின், ஆசிஷ் நெஹ்ரா.

இங்கிலாந்து: 
ஆன்ட்ரூ ஸ்டிராஸ் (கேப்டன்), கெவின் பீட்டர்சன், ஜொனாதன் டிராட், இயன் பெல், ரவி போபரா, பால் காலிங்வுட், மாட் பிரையர், டிம் பிரெஸ்னன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆன்டர்சன், கிரீம் ஸ்வான், லுக் ரைட், ஜேம்ஸ் டிரட்வெல், மைக்கேல் யார்டி, கிறிஸ் டிரெம்லெட்.
நெஹ்ரா சந்தேகம்: இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெஹ்ரா விளையாடுவது சந்தேகம் என இந்திய கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
அவர் காயத்திலிருந்து 80 சதவீதமே குணமடைந்துள்ளார். அதனால் அவர் விளையாடுவது சந்தேகம். முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கியது போலவே, இரண்டாவது ஆட்டத்திலும் சிறப்பாக ஆட முயற்சிப்போம். உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் நெருக்கடியின்றி விளையாடுவதற்கு கற்றுக் கொண்டுள்ளோம். இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கமாட்டோம். இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் மட்டும் களமிறங்குவது ஆபத்தானது. சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் நிறைய பந்துவீச்சாளர்கள் உள்ளனர். எனவே 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 1 சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்குவது சரியாக இருக்கும் என்று தோனி கூறியுள்ளார்.

சேவாக்கை வீழ்த்த வியூகம்
இந்தியாவின் அதிரடி தொடக்க வீரர் சேவாக்கை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளதாக இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் தெரிவித்துள்ளார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். எங்களை விட இந்தியாவுக்கு அதிக அளவில் நெருக்கடி இருக்கும். அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்வோம். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமானதுதான். ஆனாலும் நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்.
எங்களின் தாயகத்தில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருந்தாலும், இந்தியாவில் சிறப்பாக ஆடியதில்லை. எங்களின் பந்துவீச்சு கவலையளிப்பதாக உள்ளது. பந்துவீச்சு மிக முக்கியமானது. சச்சின், சேவாக் ஆகியோர் எங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர்.
சேவாக்கை கட்டுப்படுத்த சில திட்டங்களை வைத்துள்ளோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. சேவாக்கை விரைவில் வீழ்த்தாவிட்டால் அவர் வேகமாக ரன் குவித்துவிடுவார். இந்தியாவின் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் அவர்களுக்கு நெருக்கடி அளிக்க முடியும். 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக