புதன், ஜூலை 27

மகளின் மேல் தந்தைக்கு உயிர். தந்தை மேல் மகளுக்கு உயிர்.



ஒரு கேரக்டருக்காக தன் உடலையே வருத்தி மாற்றிக்கொள்ளும் பிறவி நடிகன் விக்ரம், மதராசப்பட்டிணம் என்ற வித்தியாசமான படத்தை வழங்கிய இயக்குநர் விஜய் இணைந்து ட்ரெய்லரிலேயே மிரட்டும் படம் என்பதால், நீண்டநாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படம். 

ஊட்டி அருகே ஒரு கிராமத்தில் வாழும் மன வளர்ச்சி குன்றிய விக்ரமிற்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது, ஆனால் விக்ரமின் காதலி+மனைவி பிரசவத்தில் இறக்கிறார். மகளின் மேல் தந்தைக்கு உயிர். தந்தை மேல் மகளுக்கு உயிர். அழகான அந்தக் குழந்தைகளின் வாழ்வில் விக்ரமின் பணக்கார மாமனார் குடும்பம் குறுக்கிடுகிறது. விக்ரமின் குழந்தை இறந்து போன தங்கள் மகளின் நினைவாக வேண்டும் என்று விக்ரமை ஏமாற்றி, பேத்தியை தூக்கிச் செல்கின்றனர். சென்னைத் தெருவில் அனாதையாக விடப்படும் விக்ரமிற்கு உதவ முன்வருகிறார் வக்கீல் அனுஷ்கா. மனவளர்ச்சி குன்றியவரிடம் குழந்தையைக் கொடுக்க முடியாதென விஷயம் கோர்ட்டுக்குப் போகிறது. பாசமுள்ள தந்தையும் மகளும் இணைந்தார்களா என்பதே கதை. 
விக்ரமின் நடிப்பில் மற்றொரு மைல்கல் இந்தப் படம். மனவளர்ச்சி குன்றியவராக அவர் காட்டும் நடிப்புகள்  அற்புதம். ஆறு வயது குழந்தையின் மனநிலை கொண்டவராக வாழ்ந்திருக்கிறார் விக்ரம். விரல்களில் ஆரம்பித்து ஒவ்வொரு நகக்கணுவும் நடிக்கின்றது. எந்த வித ஹீரோயிசமும் செய்யாமல் தெய்வத் திருமகனாக வாழ்ந்திருக்கிறார். குழாயில் ஒழுகும் தண்ணீரைக் கண்டுகொள்ளாமல் நார்மல் மக்கள் கடப்பதும், விக்ரம் அதை மூடுவதும் ஒரு நிமிடத்தில் நமக்குள் பல சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் காட்சி. மனைவி இறந்த செய்தி கேட்டு, அவர் கொடுக்கும் க்ளோசப் எக்ஸ்பிரசன் நம்மையும் கண்கலங்க வைக்கிறது. 


தெய்வத் திருமகள் நிலாவாக வரும் குழந்தையும் நல்ல நடிப்பு. ஆனாலும் ஏதோ ஒன்று அதனிடம் மிஸ்ஸிங் தான். 

அருந்ததிக்கு அப்புறம் அனுஷ்காவிற்கு நடிப்பதற்கு வாய்ப்புள்ளபடம். கதையின் முக்கியப் பாத்திரமாக வருகிறார். விழிகளில் பாடலில் அனுஷ்கா அழகோ அழகு. இந்த அளவிற்கு அவரைக் குளோசப்பில் வேறு யாரும் காட்டியதும் இல்லை. விக்ரமை குழந்தையுடன் சேர்த்து வைக்க அவர் நடத்தும் போராட்டத்திற்கும் படத்தின் ஓட்டத்திற்கும் உறுதுணையாக சந்தானம். வழக்கம்போல் ஒருவரிக் காமெடியால் கலக்குகின்றார். அமலா பாலிற்கு பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை. காலை-மாலை மட்டுமே யூஸ் ஆகும் ஆவின் பால் ரேஞ்சுக்கே டீல் செய்திருக்கிறார்கள். 


ஊட்டி கதைப்பகுதியில் காமெடிப் பொறுப்பு ஏற்பது எம்.எஸ்.பாஸ்கரும் பாண்டுயும். வழக்கமான பொண்டாட்டி மேல் சந்தேகபப்டும் காமெடி தான் என்றாலும், சீரியசான படத்தில் பெரிய ரிலீஃப் அது தான். வில்லன் வக்கீலாக வரும் நாசர் கம்பீரமாக அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்திப் போகிறார். 

மனவளர்ச்சி குன்றிய ஹீரோ என்பதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், டிராமா போன்ற கதை தான். அதனாலேயே முதல் பாதியில் கொஞ்ச நேரமும் இடைவேளைக்கு அப்புறம் கொஞ்ச நேரம் சீரியல் போன்று நகர்கிறது. பிறகு மீண்டும் கோர்ட்-சவால் என படம் சூடு பிடிக்கின்றது. டீசண்டான அனுஷ்கா கேரக்டருக்கு டூயட் சாங் போட்டதும் மிகப்பெரிய குறை தான். அது இல்லாமலேயே இந்தப் படத்தை ரசிக்க முடிகின்றது. கிளைமாக்ஸும் செண்டிமெண்ட்டாக இருந்தாலும், அவ்வளவு திருப்தியான முடிவு இல்லை. 

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாப்பா, வெண்ணிலவே பாடல்கள் நன்றாக உள்ளன. கதை சொல்லும் பாடல் கேட்க சுமார் என்றாலும் எடுத்திருக்கும் விதம் குழந்தைகளையும் கவரும். பாட்டி வடி சுட்ட கதையை ராஜா கதியுடன் மிக்ஸ் பண்ணி விக்ரம் சொல்லும் அழகும், கிராஃபிக்ஸ் உதவியுடன் காட்டிய விதமும் அழகு. 
கள்ளங்கபடமற்ற அன்பை படம் முழுதும் தெளித்து நம்மைப் பல இடங்களில் கண்கலங்க வைக்கிறார்கள். படத்தின் முக்கிய பலம் வசனங்கள். படம் நெடுகெ மெல்லிய நகைச்சுவை பரவிக்கிடக்கிறது, அதுவே இப்படத்தை ஃபீல் குட் வகையில் சேர்க்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக