புதன், ஜனவரி 4

உகந்த 10 கட்டளைகள்

தபால்மூலம் தொடர்புகளை வைத்துக்கொள்ளும் காலம் மாறி,  தற்போது மின்னஞ்சல்,  ஸ்கைப்,  பேஸ்புக் போன்றவற்றில் உடனுக்குடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் காலம் வந்துவிட்டது. கடல் கடந்து வாழும் உறவினர்களுடன் எப்படி தொடர்பை ஏற்படுத்தலாம் என்ற கவலை இனி எழத்தேவையில்லை.

பேஸ்புக் பற்றி தெரியாத இளம் தலைமுறையினர் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்றே கூறவேண்டும். சமூக இணைப்பு வலைத்தளங்களாக பேஸ்புக் போன்றவை இயங்கிக்கொண்டிருக்கின்றன. காலம் கடந்தப்பின்னும் பழைய நண்பர்களை , உறவுகளை நினைவில் வைத்துக்கொள்ளவதற்கு பேஸ்புக் உதவிபுரிகின்றது.

' பேஸ்புக்' இல் நன்மைகள் அதிகமாக இருந்தாலும் அதனது பாவனையாளர்கள் சிலர் அதனை முறைக்கேடான வகையில் பயன்படுத்துகின்றார்கள். அண்மையில் கூட காதலியின் நிர்வாணப் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன் என்ற செய்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் தள்ளியது.

இது அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் நடந்தது. ஆனால் தாம் பதிவேற்றம் செய்யும் விபரங்கள்,  மோசடிகளுக்கு பயன்படுத்தப்படலாம் என்பதும், புகைப்படங்கள் போன்றவை வேறு இணையத்தளங்களில் - ஆபாச இணையத்தளங்கள் உட்பட- துஷ்பிரயோகம் செய்யப்படலாம் என்பதையும் பலர் உணர்வதில்லை.

இவ்வாறான முறைக்கேடான விடயங்கள் பேஸ்புக்கில் தற்போது அரங்கேறிவருகின்றன. எனவே இவ்வாறான ஆபத்தான சந்தர்ப்பங்களை எதிர்நோக்குவதற்கு பதிலாக பேஸ்புக் பாவனையாளர்கள் சற்று நிதானத்துடன் தங்களது விபரங்களை பதிவு செய்வது நன்மையானது.

பேஸ்புக்கில் பின்பற்றுவதற்கு உகந்த 10 கட்டளைகள்:

நண்பர்கள் மாத்திரம் :
 பேஸ் புக்கில் உங்கள் விபரங்களை அனைவரும் பார்க்கக்கூடியதாகவோ அல்லது நீங்கள் தெரிவு செய்த நண்பர்கள் மாத்திரம் பார்கக்கூடியதாகவே ஒழுங்கமைத்துக்கொள்ள வசதியுண்டு. இவற்றை எதை தெரிவு செய்ய வேண்டுமென தீர்மானியுங்கள். பொதுவாக இரண்டாவதை தெரிவு செய்வது பாதுகாப்பானது.


பிறந்த திகதி மற்றும் பிறந்த இடம்:
பல இணையத்தளங்களில் தங்களது கடவுச்சொல்லை  (பாஸ்வேர்ட்) மாற்ற வேண்டிய தருணங்களில் பாதுகாப்புக் கேள்வியாக பிறந்த திகதி,  பிறந்த இடம் என்பவை கேட்கப்படுகின்றன. இவற்றை நீங்கள் பேஸ்புக்கில் வெளியிடும்போது, சமூக விரோதிகள் அவற்றை பயன்படுத்தக் கூடிய நிலையேற்படலாம்.

அடையாள அட்டை இலக்கம், தாயாரின் கன்னிப்பெயர்:
 பெரும்பாலான நிறுவனங்கள், இணையத்தளங்கள்  நீங்கள் யார் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு தாயாரின் கன்னிப்பெயர், தேசிய அடையாள  அட்டை இலக்கம் போன்றவற்றை கேட்பது வழக்கம்.  எனவே அந்த இலக்கத்தை அனைவருக்கும் பகிரங்கமாக்குவது மோசடிப்பேர்வழிகள் பயன்படுத்திக்கொள்வதற்கு வழியேற்படுத்தலாம்.


சொந்த முகவரி, குறுக்கு வழிப்பாதைகள்:
இது மிகவும் முக்கியமான விடயமாகும். சொந்த முகவரியை நீங்கள் பதியும் இடத்து நபர்களின் அடையாள விபரங்களை திருடுபவர்களிடமிருந்து மாத்திரமல்லாமல்,  கொள்ளையர்கள்,  பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுப்பவர்கள் ஆகியோரிடமிருந்தும் ஆபத்தை எதிர்நோக்க நேரிடலாம்.
வீட்டிற்கான குறுக்குவழிகளை சொல்வது,  நீங்கள் திருடர்களுக்கு வீட்டிற்கு வருவதற்கான குறுக்கு வழிகளை சொல்லிக்கொடுப்பதாக அமையும்.


விடுமுறைகள் :- 
விடுமுறை தினங்களில் நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லப்போவதை பேஸ்புக்கில் பதிவு செய்யும்போது அது திருடர்களுக்கு நீங்கள் விடும் அழைப்பாக அமைந்துவிடுகிறது. அதாவது 'நான் இந்த தினத்தில் வீட்டில் இருக்கமாட்டேன். நீங்கள் வந்து திருடிவிட்டு செல்லுங்கள்' என்று அழைப்பு விடுவதாக அமைந்துவிடும்.


பொருத்தமற்ற படங்கள்:- 
இதில் மிக மிக கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக பேஸ்புக் பாவனையாளர்கள் சவாலுக்குட்படுத்தப்படுவது இந்த புகைப்பட விடயங்களில்தான். சிலர் புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக எல்லா வகையான படங்களையும் பதிவேற்றம் செய்துவிடுவார்கள். பொதுவாக பெண்களது படங்களை சமூகவிரோதிகள் எடுத்து அதை இழிவுக்குட்படுத்திவிடலாம். இது பெண்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடுகின்றது.

வேடிக்கை என்ற பெயரில் அலங்கோலமான, அநாகரீகமான புகைப்படங்களை பதிவேற்றாதீர்கள்.

உங்கள் மேலதிகாரிகள், நீங்கள் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்ககூடிய நிறுவனங்களின் அதிகாரிகளும் இப்படங்களை பார்க்கக்கூடும்  என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே படங்களை பதிவு செய்யும் போது அதில் கவனம் தேவை.

குற்றங்களை ஒப்புக்கொள்ளல் :
நீங்கள் வேலைத்தளங்களில் செய்த பிழைகள்,  உதாசீனங்கள்,  நீங்கள் யாருடன் படுத்துறங்கினீர்கள், போன்ற விபரங்களை இணையத்தளங்களில் வெளியிடுவது உங்களை பணிநீக்கம் செய்வதற்கு வழிவகுப்பதுடன் வாழ்க்கை முழுவதும் வருந்தும் நிலையை ஏற்படுத்திவிடலாம்.  பின்பு பொழுதுப்போக்கிற்காக உங்களிடம் மோசமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும் அழைப்புகள் விடுக்கப்படலாம்.

தொலைபேசி இலக்கங்கள்: 
இது நேர நெருக்கடியிலும் கூட உங்களுக்கு தேவையில்லாத அழைப்புகளை ஏற்படுத்தி தொந்தரவு செய்வதற்கு வழிவகுக்கும். நீங்கள் தொலைபேசி மூலம் ஏதேனும் பொருட்களை விற்பதற்கோ சேவைகளை வழங்குவதற்கோ நோக்கம் கொண்டவராக அல்லது பெரும் எண்ணிக்கையான தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க தயாராக இருந்தால் தவிர,  தொலைபேசி இலக்கங்களை  பேஸ்புக்கில் வெளியிடாதீர்கள்.


 பிள்ளைகளின் பெயர்கள் :
பிள்ளைகளின் பெயர்கள், அவர்களது புகைப்படங்கள் என்பவற்றை பதிவு செய்யப்படுவது மோசடியாளர்கள், துஷ்பிரயோகதாரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். பெரியவர்களாவது தமது அடையாள விபரங்கள் திருடப்பட்டுள்ளதை எப்போதாவது கண்டறிந்துவிடுவர். ஆனால், சிறுவர்கள் இவற்றை கண்டறிவது கடினம். எனவே கவனம் தேவை.

 நண்பர்கள் தெரிவு:
பேஸ் புக்கில் அதிக 'நண்பர்களை' கொண்டிருப்பதை சிலர் பெருமையாகக் கருதுகின்றனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் ஒரு சிலருடன் மாத்திரமே தொடர்பில் இருப்பர். உங்களுக்கு ஏதேனும் பிரசாரங்கள், விளம்பரம் போன்றவற்றுக்கு பேஸ் புக்கை பயன்படுத்தும் நோக்கமில்லை எனில் யாரை 'பேஸ் புக்' நண்பர்களாக தெரிவு செய்வது, ஏற்றுக்கொள்வது என்பதில் கவனமாக இருப்பது நல்லது. கிரிமினல்கள்,  மோசடியாளர்கள் எல்லாம் உங்கள் நண்பர்களாக இருக்க வேண்டுமா என்ன? கூடா நட்பை ஒதுக்கிவிட வேண்டும் என்பது பேஸ் புக்கிற்கும் பொருந்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக