புதன், மார்ச் 23

வந்துவிட்டது வெயில் காலம்..!



வந்துவிட்டது வெயில் காலம்..! இனி, வியர்வையில் நனைத்து, தாகத்தில் தவிக்க வைத்து, உடம்பையெல்லாம் பிசுபிசுப்பாக்கி... படுத்தி எடுத்துவிடும் இந்த வெயில்.

ஆண்களின் பாடு ஓரளவுக்குப் பரவாயில்லை. ஆனால், எப்போதுமே உடல் முழுக்க மூடிக் கொண்டிருக்கும் ஆடைகளை அணிவதால்... தோல் பிரச்னைகள் தொடங்கி, சிறுநீர் கோளாறுகள் வரை இந்த வெயில்பெண்களை த்தான் கூடுதலாக வாட்டி எடுக்கும். 

''சின்னச் சின்ன மெனக்கெடுதல் மூலமாக வெயிலின் பாதிப்பை முற்றிலுமாகத் தடுக்க முடியும். வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக சுரப்பதால், நீரோடு சேர்ந்து சோடியம் குளோரைடு போன்ற உப்புச் சத்துக்களும் உடலிலிருந்து வெளியேறுகின்றன. இவை உடலின் மேற்பரப்பில் படிவதால்தான் அரிப்பு ஏற்படுகிறது. எனவே, வெளியில் போய் உள்ளே வந்ததும், சற்றே வியர்வை அடங்கிய பிறகு, வியர்வையில் நனைந்த பாகங்களை நன்றாகக் கழுவிவிட்டால், அரிப்பு ஏற்படாது. அப்படியே விட்டுவிடும் பட்சத்தில் அரிப்பு உருவாகி, அதனை சொறியும்போது கிருமித்தொற்று ஏற்படுகிறது. இதன் தொடர் விளைவாக... ஃபங்கஸ், வியர்க்குரு, தடிப்பு என ஏதாவது ஒரு பிரச்னையால் தோல் பாதிக்கப்படுகிறது.
வெயில் காலங்களில் இறுக்கம் அதிகம் இல்லாத உடைகளை அணியலாம். வெயிலால் உண்டாகும் பெரிய அளவிலான பாதிப்பு... தோலுக்கும், சிறுநீரகத்துக்கும்தான். தோலில் ஏற்படும் கிருமித்தொற்று கிட்னி அலர்ஜியை உண்டாக்கும். உடலின் மேற்பரப்பில் படியும் சோடியம், தோலில் வறட்சியை ஏற்படுத்தும். முகத்திலும் லேசான கறுமை ஏற்படும். அதனால், சூரிய ஒளியின் தாக்கத்தைக் குறைக்கக்கூடிய க்ரீம்களைப் பயன்படுத்தலாம். ரசாயனக் கலப்பற்ற இயற்கையான க்ரீம்கள் இப்போது மார்க்கெட்டில் நிறைய வருகின்றன. கை, கால்களில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாம். குளிக்கும்போது கடலை மாவு, பாசிப்பயறு மாவு என வறட்சியைத் தாங்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தலாம்.
முகத்தில் கிருமித்தொற்று ஏற்படாதபடி தடுக்க மஞ்சள் பூசுவது நல்லது. மஞ்சள் மகத்தான கிருமிநாசினி. அதனால்தான் மஞ்சள் பூசும் வழக்கத்தை நம் முன்னோர்கள் வலியுறுத்தி வந்தார்கள். சாதாரண காலங்களில் பூசும் மஞ்சளைக் காட்டிலும், வெயில் காலங்களில் அதிகம் பூசலாம். முகம் மட்டும் அல்லாது வியர்வை அதிகம் சுரக்கும் அக்குள் போன்ற பகுதிகளிலும் மஞ்சளைப் பயன்படுத்தலாம்.
வியர்வையால் ஏற்படும் இன்னொரு பாதிப்பு... தலைமுடியின் வேர்ப் பகுதிகளில் சிறு சிறு கட்டிகள் வருவது. இதனால் பொடுகு, முடி உதிர்தல் போன்றவை ஏற்படும். சாதாரண காலத்தைக் காட்டிலும் வெயில் காலத்தில் தலையைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கெண்ணெய் குளியல் மிகவும் நல்லது. செம்பருத்தி, மருதாணி ஆகியவற்றைத் தேய்த்துக் குளிப்பதன் மூலம் தலையைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். தலைக்கு சாம்பிராணி புகைபோடுவது கிருமித்தொற்றைத் தடுக்கும்!'' -
''ஆண்களைக் காட்டிலும் பெண்களின் சிறுநீர்ப் பையின் கொள்ளளவு அதிகம். சாதாரணமாகவே சிறுநீரை அடக்கி வைக்கும் சிக்கலான சந்தர்ப்பம் பெண்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறது. ஆண்களைப் போல் எந்த இடத்திலும் சிறுநீர் கழிக்கலாம் என்கிற நிலை பெண்களுக்கு இல்லை. உறவினர் வீடுகளுக்கோ, வெளி இடங்களுக்கோ செல்கையில் 'பாத்ரூம் எங்கே?’ எனக் கேட்பதற்குக்கூட சங்கோஜப்பட்டு, கட்டுப்படுத்திக் கொள்ளும் பெண்களும் உண்டு. ஆனால், வெயில் காலத்தில் அப்படி கட்டுப்படுத்தவே கூடாது.
வியர்வை அதிகம் சுரப்பதால், சிறுநீர் குறைவாகவே இருக்கும். என்றாலும், அதன் அடர்த்தி அதிகம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதை வெளியேற்றாமல் அடக்கி வைக்கும்போது, ஆசிட்டாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. சிறுநீரின் அடர்த்தி அதிகரிக்கும்போது, சிறுநீர்ப் பையில் நோய் எதிர்ப்பு சக்திக்காக இருக்கும் புரதச்சத்துக்கள் குறையும். அதன் முதல் அறிகுறிதான்... நீர்க்குத்தல். 40 வயது தாண்டிய பெண்களுக்கு உப்புச் சத்துக் குறைவால் கை, கால்களில் மரமரப்பு மற்றும் இழுப்பு ஆகியவை ஏற்படும்.
இதை எல்லாம் ஆரம்பத்திலேயே தடுக்க நாம் செய்யவேண்டிய சாதாரண வேலை... நிறைய தண்ணீர் குடிப்பதும், சிறுநீரை அடக்கிவைக்காமல் உரிய நேரத்தில் கழிப்பதும்தான். உடலின் நீர் இழப்பை ஈடுகட்டும்விதமாக இளநீர், தர்பூசணி, மோர், பழச்சாறுகளையும் நிறைய பருகலாம். வியர்வையோடு வெளியேறும் உப்புச் சத்துக்களை ஈடுகட்ட, தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்துப் பருகலாம். வெயில் காலத்தில் வறட்சியைத் தாங்க முடியாமல் குழந்தைகள் அழும்போது, சிறிதளவு உப்புச் சேர்த்த தண்ணீரைக் கொடுத்தாலே சரியாகிவிடும்'' என்று எளிய தீர்வுகளைச் சொல்லும் டாக்டர் மோகன்தாஸ், நிறைவாகச் சொன்னது அட்சர லட்சம் பெறும். அது -
  
''அரேபிய நாடுகளைப் போல் எங்கும் வெயில் அதிக உக்கிரமாக இருப்பதில்லை. எனவே, குளிர்ச்சிக்காக இஷ்டம் போல கண்டவற்றையும் வாங்கிப் பருகாமல்... தண்ணீர் மற்றும் இயற்கையே கொடையாக தந்திருக்கும் குளிர்ச்சி தரும் பொருட்களைப் பயன்படுத்தினாலே போதும்... வெயிலின் அபாயத்தில் இருந்து முழுவதுமாக நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்!''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக